
ஆழ்வார்குறிச்சி ப சொக்கலிங்கம்
15.10.2021
பாரதி அவர்களின் நூறாவது நினைவு நாள் வெகு விமரிசையாக 11.09.2021 அன்று கொண்டாடப்பட்டது. இந்த வேளையில் பாரதி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, நாம் நினைவு கூர்வது, நம் கடமை.
பாரதி அவர்கள் யார்?
அவரை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியே “பாரதி….யார்? “என்ற இந்தக்
கட்டுரை.
மேலும், சமூக வலைத்தளங்களில் தேவைக்கு அதிகமாய் மூழ்கி ,நேரமின்மையால் அவதிப்படும் நம் இளைய தலைமுறையினருக்கு, எளிய வார்த்தைகளில், சீக்கிரமாய் படித்து விடும்படியாக, பாரதி அவர்களை அறிமுகம் செய்து வைப்பதும் இந்த கட்டுரையின் நோக்கம்.
பாரதி அவர்கள் வாழ்ந்த காலம் கிட்டத்தட்ட முப்பத்தொன்பது வருடங்கள். பொது வாழ்வில் அவர் பங்கேற்றது வெறும் பதினேழு வருடங்கள் மட்டுமே.
அந்த பதினேழு வருடங்களில் அவர் ஏற்படுத்திய தாக்கம், அவர் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்தும், இன்றைக்கும் நம்மையெல்லாம் சிலாகிக்க வைக்கின்றது.
“வறுமையிலும் நிரம்பியிருந்தது உன் பேனா மை
அது தீராது கொடுத்தது உன் வார்த்தைகளுக்கு வல்லமை “
அச்சமில்லை என முழங்கி அச்சத்திற்கே அச்சம் தந்தாய்
துணிந்ததால் உனக்குத் துக்கம் இல்லை, ஆங்கிலேயருக்குத் தூக்கம்
இல்லை
உணர்ந்ததை எழுதி, எழுதியதாய் வாழ்ந்தாய் ஏட்டுச் சுரைக்காயில் கறி சமைத்துக் காட்டியவாறே உன் வார்த்தைக்கட்டு ஒரு அவிழாத முண்டாசு அது படிப்பவர்களைப் பரவசப்படுத்தும் சரவெடி பட்டாசு
பெண்ணியம் எழுதியதில் உனக்கிருந்தது கண்ணியம் போராடிப் பெண்மையைப் போற்றியதில் வெளிப்பட்டது உன் ஆண்மை
தீண்டாமை தீண்டினாய் கொத்தும் வரிகளில் ஈசனாய் காணப்பட்டாய் வறண்டிருந்த கண்களில்
வார்த்தைகள் மீசை முறுக்கின உன் சீட்டுக்கவியில் நெஞ்சு நிமிர்த்தி, பெரிதினும் பெரிது கேட்ட கவிஞன் நீ
வீரமும், ஈரமும் ஒருசேர உன் மனதில் கொஞ்சலும்,ரௌத்திரமும் கருத்துச் செறிவான உன் கவிதைகளில்
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டியதில் தெரிந்தது உன் வழி தனி வழியென்று தையலை உயர்வு செய்து,கடைக்கோடிக்கும் தமிழ் சேர்த்த சாரதி நீ
பரம்பொருளென மதங்களின்மேல் வைத்திருந்தாய் நம்பிக்கை
வெறும்பொருளென உதறியது உன்னை ஒரு மதம் பிடித்த தும்பிக்கை
“சந்தரிசையின் கதை” முடியும் முன்பே முடிந்தது உன் கதை
விதவை மறுமணம் பரவலாய் நனவாகா உன் இன்னுமொரு கனவு
உன் கவிதைகளை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருப்போம்
சாதி மத பேதங்களை விடாது வளர்த்துக் கொண்டு.
பாரதி அவர்கள் , பிச்சைக்காரர் ஒருவரை வீட்டிற்குக் கூட்டி வந்து தான்
கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து அவருக்குக் கொடுத்துவிட்டார்.
செல்லம்மாள் , “நண்பர்கள் வாங்கிக் கொடுத்த வேட்டியை,
பிச்சைக்காரருக்குக் கொடுத்து விட்டீர்களே “என்று கேட்டதற்கு “இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்போம்” என்றார்.
1919ம் ஆண்டு ரவுலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு, ராஜாஜி அவர்களின் விருந்தினராக, காந்தியடிகள் சென்னை வந்த சமயம், காந்தியடிகள் தங்கியிருந்த இடத்திற்கு பாரதி அவர்கள் சென்று, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாத சமயத்தில், விறுவிறுவென,அங்கு தம் நண்பர் வ.ரா நிற்பதை பார்த்து, அவரை அழைத்தவாறே, காந்தியடிகள் அறைக்குள் நுழைந்து,காந்தியடிகளை வணங்கிவிட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் அமர்ந்து விட்டார்.” “மிஸ்டர் காந்தி, இன்று மலை ஐந்தரை மணிக்குத் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அக்கூட்டத்திற்கு தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” என்று
கேட்டார்.காந்தியடிகள் தன் உதவியாளர் மகாதேவ் தேசாயிடம்
வினவினார்.பின்னர் .”இன்றைக்கு வர இயலாது. தங்கள் கூட்டத்தை
நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?” என்றார்.”முடியாது.நான் போய்
வருகிறேன். மிஸ்டர் காந்தி,நீங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்” என்று கூறி பாரதி அவர்கள் வெளியே போய்
விட்டார்.பாரதி அவர்கள் போனதும் காந்தியடிகள் “யார் இவர் ?” என
வினவினார்.ராஜாஜி அவர்கள் “இவர் எங்கள் தமிழ்நாட்டுத் தேசிய கவி” என்று அழகுறச் சொன்னார்.”இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என காந்தியடிகள் கூறினார்.பாரதி அவர்கள், மாலை நடந்த கூட்டத்தில், காந்தியடிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
பாரதி அவர்கள் புதுச்சேரியில் நண்பர்கள் மற்றும் குழந்தைகளோடு கடலில் நீராட சென்று கொண்டிருந்தார். வழியில் வித்தை காட்டும் பாம்பாட்டி ஒருவர் குளிரால் நடுங்கியவாறு அமர்ந்திருந்தார்.அவரைக் கண்டதும் பாரதி அவர்கள் தான் அணிந்திருந்த மேல் வேட்டியை , கீழ் வேட்டியாகக் கட்டிக் கொண்டு, கீழ் வேட்டியை பாம்பாட்டிக்கு, போர்த்துவதற்காக கொடுத்தார். நண்பர் கேட்டதற்கு, என் மேல் வேட்டி சற்று கிழிந்திருந்தது. அதனால் கீழ் வேட்டியைக் கொடுத்தேன் என்றார்.
கடலில் நீராடும் முன், நண்பர்கள் சிலர் ,சில்லறைக் காசுகளை கடலுக்குள் போட்டு விட்டு குளித்தனர்.அவர்களிடம், பாரதியார், குளங்களில் குளிக்கும் முன் காசு போடுவது வழக்கம். அது, கோடையில், குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள் பயன்பெறுவதற்காக. “நீங்கள் கடலில் போய் காசு
போடுகிறீர்களே” என அவர்களின் மூட நம்பிக்கையைச் சாடினார்.
பாரதி அவர்கள் தம் நண்பர் சுத்தானந்தருடன் புதுச்சேரியில் நடந்தவாறே, புதிதாக துவங்கப் போகும் பத்திரிகை குறித்தும், அதற்காக தம்மிடம் இருக்கும் பணம் குறித்தும் கூறிக் கொண்டு வந்தார்.அப்போது பழம் விற்றவாறே எதிரே வந்த வயதான பெண்மணி, பாரதி அவர்களிடம்,” ஒன்றுமே விற்கவில்லை. நீங்கள் வாங்குங்களேன்” என்று கேட்க, பத்திரிகை நடத்த வைத்திருந்த, கையில் வைத்திருந்த பணம் அனைத்தையும், அந்த பெண்மணியிடம் கொடுத்து விட்டு, சில பழங்களை மட்டும் பெற்றுக் கொண்டு, நடையைத் தொடர்ந்தார். பத்திரிகை கனவு முடிந்து போயிற்று.
ஒரு முறை திருவனந்தபுரம் மிருகக் காட்சிச் சாலை சென்றிருந்தார் . திடீரென சிங்கம் இருந்த பகுதிக்குள் பயம் துளியும் இன்றி நுழைந்து, சிங்கத்தைக் கட்டிப் பிடித்தார். சுற்றியிருந்தவர்கள் அவரை சிங்கத்திடம் இருந்து விலக்கி அழைத்துச் சென்றனர்.
“கண்ணுக்கினிய கரு நிற காக்கை” எனப் பாடி எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டினார்.
தான் வறுமையில் வாடியபோதும் , முறத்து அரிசி மணிகளை, முற்றத்தில் சிட்டுக் குருவிகளுக்கு அள்ளித் தெளித்து, அவை உண்பது கண்டு, மகிழ்ச்சியாய் பாட, பாரதி அவர்கள் ஒருவரால்தான் முடியும்.
வறுமையில் புலவர்கள் உழன்ற காலகட்டம்.பாரதி அவர்கள் செப்புக் காசு, சில்லரைக் காசு போன்றவற்றிற்கு எழுதவில்லை. சோறு கேட்டுப் பாடியும், என்னைக் காப்பாற்று என்றும் பாடிய புலவர்கள் மத்தியில், என் பாட்டிற்குப் பரிசளித்து நீ பல்லூழி வாழியவே “என்று பாடினார்.”காணி நிலம் வேண்டும் பராசக்தி” என்று காளியிடம் வேண்டினார்.” எட்டயபுரம் மகாராஜா ,என்னை அழைக்க ஜதி பல்லக்கு அனுப்பு. பொற்கிழி தா “என்று மிரட்டலாய் விண்ணப்பம் அனுப்பினார்.
1905 சமயம்,வங்கப் பிரிவினையின் போது, விவேகானந்தரின் மானஸ
புத்திரி “சகோதரி நிவேதிதா” என்ற ஆங்கில மாதுவைச் சந்தித்தார். பின்னர் நிவேதிதா அவர்களை தனது மானசீக குருவாக பாரதி அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் .நிவேதிதா அவர்கள், சுதந்திர பாரதத்திற்கு பாடுபடுதல், சாதிபேதத்தை ஒழித்தல், பெண் முன்னேற்றத்திற்கு ஆவண செய்தல் என்ற மூன்று பெரும் தொண்டுகளுக்கான விதைகளை பாரதி அவர்களின் மனதில் ஊன்றினார்.
இலக்கணமென்ற பெயரில் தமிழ் கட்டுண்டிருந்த காலத்தில், மனிதர்களின் தினசரி பிரச்சனைகள், நாட்டு நெருக்கடிகள், பிற நாட்டுத் தமிழரின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கை சீற்றங்கள் குறித்து எளிய வார்த்தைகளில் எண்ணற்ற கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள் எழுதினார்.
“சுரண்டுவோர்க்கு உழைப்பை அர்பணிக்கக் கூடாது. உழவுக்கும்
தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” எனும் பொதுவுடமைக் கருத்துகள் பாரதி அவர்களின் பாடல்களில் ஓங்கி ஒலித்தன.
கனகலிங்கம் என்ற அரிஜன இளைஞருக்கு பூணூல் மாட்டிவிட்டார்
பாரதியார்.
“The fox with golden tail” என்ற புத்தகம் எழுதிய பாரதி அவர்களுக்கு,500
பிரதிகளுக்கு உடனே ஆர்டர் வந்தது. அச் சமயம் தம் நண்பர் திரு.குவளை கண்ணனிடம், நான் எழுதிய பாஞ்சாலி சபதத்திற்கு, பாராட்டுக் கடிதங்கள் வரவில்லை. நான் எழுதிய ஆங்கில நூலுக்கு பெரும் வரவேற்பு என்று வருத்தத்தோடு கூறினார். தமிழனின் அடிமை மனப்பாங்கு, ஆங்கில மோகம் அவர் மனதை புண்படுத்தின.
பாரதி அவர்களின் கவிதை வரிகளில் இசை ரிதம் இருக்கும் …
உதாரணத்திற்கு ”உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்”.
எளிய வார்த்தைகளில் இருந்த பெரும் சக்தியை உணர்ந்து , தனது
கவிதைகளை படைத்தவர் பாரதி அவர்கள்.
நாடோடி மெட்டுகளை எளிதாக தமிழ் பாட்டுகளில் நுழைத்தவர் பாரதி
அவர்கள் .ரயிலில் போகும்போது பாடிய பிச்சைக்காரியின் பாடல்,
விறகுவெட்டியின் பெருமூச்சு, முரசொலி, குடுகுடுப்பாண்டியின் குடுகுடுப்பை சத்தம் இவை யாவையும் பாரதி அவர்களின் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
பாரதி அவர்களின் படைப்பாற்றல் அவர் புதுச்சேரியில் வாழ்ந்த பத்து
ஆண்டுகளில் உச்சத்தில் இருந்தது.”கண்ணன் பாட்டு,பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு” போன்ற காவியங்கள் அவர் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில், அவரால் இயற்றப்பட்டவை.
பாரதி அவர்களின் படைப்புகள் ஓரளவே ஆங்கிலத்தில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளன.பாரதி அவர்களின் பாடல்களை முதலில் மொழி பெயர்த்தது ஆங்கிலேயர்கள்தான். பாரதி அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, தங்களுக்குப் புரிவதற்காக மொழி பெயர்த்தார்கள். அரசாங்க மொழி பெயர்ப்பாளர் வி.இரவாகச்சார்லு அவர்கள் “தேசத் துரோகம்” எனக் கருதப்பட்ட பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவர், பாரதியின் பாடல்களில் மயங்கி, ஆங்கிலத்திலும் பாரதியின் பாடல்களை அழகுற மொழி பெயர்த்திருந்தார்.
கடலூர் சிறைவாசத்திற்குப் பின், கடையத்தில் வாழ ஆரம்பித்தார் பாரதி. புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்.அச்
சமயம்,கடையத்தில் செல்வந்தராக இருந்த திரு.சாவடி நாராயண
பிள்ளையின் நட்பு ஏற்பட்டது.சிறிது காலத்திலேயே நட்பில் விரிசல்
ஏற்பட,ஒரு நிகழ்வால், பெருங்கோபப்பட்ட திரு.சாவடி நாராயண பிள்ளை, இன்று இரவுக்குள் பாரதி அவர்களை கடையத்தை விட்டு
வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி, இரவே பாரதியை அவர்களைத்தீர்த்துக் கட்டப்போவதாக மிரட்டினார். பாரதி அவர்களின் குடும்பத்தினர், வலுக்கட்டாயமாக பாரதி அவர்களை, இரவு ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
பாரதி அவர்கள் இஸ்லாமிய, கிருஸ்துவ பாடல்கள் இயற்றியுள்ளார். 20.06.1920 அன்று மாலை, பொட்டல்புதூர் தெற்கு புது மனைத் தெருவில், முஸ்லிம் சபையில் “இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை”
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பாரதி……யார்? இந்தக் கேள்விக்கு முற்றிலுமாக விடை அறிய ஆய்வுகள் இன்றைக்கும் நடந்த வண்ணம் உள்ளன.
கிரிக்கெட் ஆட்டத்தில்,எதிரணியின் கை ஓங்கியிருக்கும் போது,தம் அணி தோற்கப்போவது உறுதி என்ற நிலையில்,ஆட்ட வரிசையில் மாற்றம் செய்து ,ஒரு அதிரடி ஆட்டக்காரரை (pinch hitter)திடீரென களமிறக்குவார்கள். அவரின்வேலை,எதிரணியை நிலை தடுமாறச் செய்வது. தான் அவுட் ஆவது பற்றி கவலை கொள்ளாமல், யார் பந்து வீசுவது என்று யோசிக்காமல், வரும் பந்துகளையெல்லாம் அடித்து வெளுக்க வேண்டும். பாரத மாதா, ஆங்கிலேயர்களின் கை ஓங்கியிருந்த கால கட்டத்தில், ஆங்கிலேயர்களை துவம்சம் பண்ண , பாரதி அவர்களை அதிரடி ஆட்டக்காரராக களமிருக்கி விட்டதாகவே தோணுகிறது.
அவருடைய வாழ்வின் அடித்தளமாய் இருந்தது “அன்பு”. எல்லா
உயிர்களிடத்தும் அன்பு . அந்த அன்பு அவரிடமிருந்து வெவ்வேறு விதமாக வெளிப்பட்டது.
பாரதி அவர்களின் வாழ்வில் இருந்து, மிக முக்கியமாய், இன்றைய
சூழலில், நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, பாராட்டும்படியான
செயல்களை மற்றவர்கள் செய்யும்போது , அவர்களை உடனே மனம்
திறந்து பாராட்டி விட வேண்டும்.பாரதி அவர்கள் வாழ்ந்த காலத்தில்,
இன்றைக்கு போற்றப்படுவதைப் போல், அவர் போற்றப்படவில்லை. அவரின் இறுதி ஊர்வலத்திற்கு இருபது பேர் மட்டுமே சென்றார்கள். நூறு ஆண்டுகள் கழித்தும் தான் போற்றப்படுவோம் என்று
அவர் நினைத்து பார்த்திருப்பாரா?
திராவிட கழகத்திற்கும், பாரதி அவர்களுக்கும் இடையே கருத்து
வேறுபாடுகள் இருந்தன.பிற்காலத்தில், பாரதி அவர்களை ஒரு மக்கள் கவி என்று போற்றியும் அவரது நூல்களை அரசுடைமையும் செய்தார் பேரறிஞர் அண்ணா. தன்னுடைய சுய சரிதைக்கு “நெஞ்சுக்கு நீதி” என்ற பாரதி அவர்களின் வரிகளை தலைப்பிட்டார் கலைஞர் கருணாநிதி . பாரதி அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் 11.09.21 அன்று,பாரதி அவர்களை நினைவு கூர்ந்து, பாரதி அவர்களைப் பெருமைப் படுத்தும் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
இது பாரதி அவர்களின் நனவான கனவுகளில் ஒன்று.
நனவாகாத பாரதி அவர்களின் மற்ற கனவுகளை நனவாக்குவதே நாம்
அவருக்கு செய்யும் கைம்மாறு.
நன்றி. வணக்கம்.